search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம்"

    ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். #HighCourt #InquiryCommission
    சென்னை:

    கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்த போது சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தலைமை செயலக கட்டிடம் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி புதிய தலைமை செயலக கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது முழு வீச்சில் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டிடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர். ரகுபதி தலைமையில் விசாரணை கமி‌ஷனை அமைத்து அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டது.

    விசாரணை கமி‌ஷன் விசாரணைக்கு ஆஜராகுமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.


    இதை எதிர்த்து கருணாநிதி உள்பட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தனர். அதில் விசாரணை கமி‌ஷனுக்கு தடை விதிக்குமாறு கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ரகுபதி கமி‌ஷன் விசாரணைக்கு தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜரானார்.

    அவரிடம் தமிழக அரசின் செயலுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். 2015-ம் ஆண்டு இந்த விசாரணை கமி‌ஷன் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும், இத்தனை ஆண்டுகளாக அந்த கமி‌ஷனுக்கு அலுவலகம், ஊழியர்கள் என்று பெரும் தொகையை அரசு ஏன் செலவு செய்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.

    ‘தலைமை செயலகத்துக்கு கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால், அது குறித்து ஊழல் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டியது தானே? அதற்கு பதில், ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் எதற்காக விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும்?

    இதனால், நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறையாதா?’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்த வழக்கை 26-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

    அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மீண்டும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கண்துடைப்புக்காகவே இது போன்ற விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.

    இதுபோன்ற ஆணையத்திற்காக பொது மக்களின் பணத்தை வீணடிக்க கூடாது. இதுவரை அரசால் எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன?

    அவற்றிற்கு எத்தனை வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? இதற்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? இந்த ஆணையங்கள் தரும் அறிக்கைக்கு எந்த பயனும் இல்லை.

    இந்த ஆணையத்தினால் அரசு சாதித்தது என்ன? இந்த ஆணையங்கள் விசாரணையை முடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்து கொள்கின்றன?

    ஆணையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் தானா? அவர்களுக்கு அரசு தானே சம்பளம் தருகிறது. இது குறித்து பிற்பகலில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். #HighCourt #InquiryCommission
    ×